tamilnadu

img

ஈஎஸ்ஐ பங்களிப்பு விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது

ஈஎஸ்ஐ பங்களிப்பு விகிதமானது, 6.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈஎஸ்ஐ எனப்படும் ஊழியர்கள் காப்பீடு சட்டம் 1948-ன் கீழ், தொழிலாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.  ஈஎஸ்ஐ சட்டதிட்டங்களின் படி, காப்பீடு பெறுவதற்கு ஒரு நிறுவனத்தில் குறைந்த பட்சமாக 10 உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டியது கட்டாயமாகும். அதோடு அதிகபட்ச மாத சம்பளமாக ரூ.21ஆயிரம் இருக்க வேண்டும். இந்த காப்பீட்டு தொகை, ஊழியர்களின் மருத்துவ செலவு, கர்ப்ப கால செலவு, உடல் பாகங்கள் இழப்பு, இறுதிச் சடங்கு செலவு போன்ற பல்வேறு தேவைகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு சந்தாவாக, ஊழியர்கள் சம்பளத்திலிருந்து 1.75 சதவீதமும், நிறுவனங்கள் பங்களிப்பாக 4.75 சதவீதமும் மொத்தம் 6.5 சதவீதம் சந்தாவாக செலுத்தப்பட்டு இருந்தது. 

இதை தற்போது, நிறுவனங்கள் பங்களிப்பு விகிதத்தை 3.25 சதவீதமாகவும், ஊழியர்கள் பங்களிப்பு விகிதத்தை 0.75 சதவீதமாகவும் குறைத்து, மொத்த விகிதத்தை 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இது குறித்து ஈஎஸ்ஐ அதிகாரிகள் கூறுகையில், ஈஎஸ்ஐ பங்களிப்பு விகிதம் குறைத்துள்ள நிலையில், குறைந்த பட்ச சம்பளம் வாங்குபவர்களுக்கு நிதிச்சுமை குறைகிறது. மேலும், வரும் காலங்களில் சிறிய நிறுவனங்களும் தாமாகவே முன்வந்து இதில் சந்தாதாரர்களாக இணையும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று தெரிவித்தனர்.